அரசியல்தமிழ்நாடு

அதிமுகவும்,அமமுகவும் என்னை வரவேற்றதே எனக்குக் கிடைத்த பெருமை – அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

என்றாவது ஒரு நாள் எனது ஊரில் அனைவரும் ஓர் அணியாகச் சேர்ந்து இருக்க வேண்டும் என நினைத்தேன். அதேபோல் இன்று அ.தி.மு.க, அ.ம.மு.க உள்ளிட்ட கட்சியினரும் சேர்ந்து எனக்கு வரவேற்பு கொடுத்துள்ளது எனக்கு கிடைத்த பெருமை என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள கருவாகுறிச்சியில் இலவச பட்டா வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த விழாவில் முக்குளம் சாத்தனூர், கருவாக்குறிச்சி காலனி, தளிக்கோட்டை காலனி ஆகிய மூன்று கிராமங்களில் சுமார் 450 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தைப் பிரித்து 704 நபர்களுக்கு பட்டா வழங்கப்பட்டது.

இந்த விழாவில் தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டிஆர்பி.ராஜா, மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பட்டா வழங்கிய பின் பேசிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறியதாவது :

நான் வாக்கு சேகரிக்கும்போது வெற்றி, தோல்வியைப் பற்றிச் சிந்திப்பது இல்லை. மன்னார்குடி தொகுதியில் டி.ஆர்.பி.ராஜா வெற்றி பெறவில்லை. ஒவ்வொரு தி.மு.க தொண்டனும் வெற்றி பெற்றதாகவே கருதுகிறேன்.

ஆரம்பத்தில் இப்பகுதியில் நான் செல்லும்போது எதிரணியை சேர்ந்தவர்களுக்கு வணக்கம் வைப்பேன். ஆனால், அவர்கள் திரும்ப வணக்கம் வைக்க மாட்டார்கள், எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கும்.

நான் எல்லோருக்குக்காகவும் தான் பணி செய்கிறேன். என்றாவது ஒரு நாள் இந்த ஊரில் அனைவரும் ஓர் அணியாகச் சேர்ந்து எனக்கு வரவேற்பு கொடுக்க வேண்டும் என நினைத்தேன். அதேபோல் இன்று அ.தி.மு.க, அ.ம.மு.க உள்ளிட்ட கட்சியினரும் சேர்ந்து எனக்கு வரவேற்பு கொடுத்தனர்.

தளிக்கோட்டை என்னை ஏற்றுக்கொண்டது. இன்று முக்குலமும் என்னை ஏற்றுக்கொண்டுள்ளது. நான் எதை நோக்கிப் பயணித்தேனோ அதில் முழுமை அடைந்துள்ளேன்.

அ.ம.மு.க-வை சேர்ந்த சகோதரி ஒருவர் இந்த மேடைக்கு வந்து என்னை வாழ்த்திச் சென்றதை, பெருமையாக கருதுகிறேன். தொடர்ந்து 12 ஆண்டுக்காலமாக பட்டா கொடுப்பதற்காக உழைத்திருக்கிறேன்.

தேர்தலுக்குப் பிறகு கட்சி கரை வேட்டியை பார்த்து வேலை செய்யும் நபர் நானில்லை. யார் வேண்டுமானானும், எந்தப் பிரச்னையாக இருந்தாலும், எந்த சமயத்தில் வேண்டுமானாலும் என்னிடம் வரலாம், எப்போதும் என் வீட்டு கதவு திறந்திருக்கும் முதலமையச்சர் மு.க.ஸ்டாலின் அவர்க்ளின் ஆட்சியில் ஒட்டுமொத்த மன்னார்குடியும் மின்னும். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.