அரசியல்தமிழ்நாடு

“என் உயிர்காத்த அமைச்சர் உதயநிதியை நான் வாழும் வரை நினைவு கூறுவேன்”- பத்திரிகையாளர் உருக்கம்

தனியார் தொலைக்காட்சியில் மூத்த பத்திரிகையாளராக பணிபுரிந்து வந்தவர் சையது அப்துல் கனி. இவர் தற்போது அமைச்சர் உதயநிதி குறித்து உருக்கமாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பத்திரிகையாளர் வெளியிட்ட அந்த வீடியோவில் அவர் பேசியதாவது :

நான் பத்திரிகை துறையில் இருந்து அண்மையில் ஓய்வு பெற்றேன். என் மகனின் திருமண வேலை நடைபெற்று கொண்டிருந்த நேரத்தில், கடந்த ஜன 23-ம் தேதி எதிர்பாராத விதமாக நான் விபத்தில் சிக்கினேன் .

அந்த விபத்தில் எனது வலது கால் எலும்பு முறிந்தது. உடனே எனது மகனின் திருமணத்திற்காக வைத்திருந்த பணத்தில் எனது குடும்பத்தார் சிகிச்சைக்கு என்னை அனுமதித்தனர்.

அன்று இரவே எனக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, அதன்பிறகு இன்னொரு சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டு தற்போது நன்றாக இருக்கிறேன்.

ஒரு பத்திரிகையாளராக இருந்தும் எனக்கு அரசு நிதி கிடைக்காத நிலையில், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லாவை நாடினேன்.

அவர் உடனே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அந்த கடிதத்தின் பிரதிபலனாக மாற்றத்திற்கான ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் ஹஸீப் என்னை தொடர்பு கொண்டு பிரச்னையை கேட்டறிந்தார். அதன்பிறகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் தொடர்பு கொண்டு இந்த நிலைமையை கூறினார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கூறிய சில மணி நேரங்களிலேயே, எனது மருத்துவ சிகிச்சைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் பார்த்துக்கொள்வதாக கூறி, எனக்கு தைரியமும் கொடுத்தார்.

சொன்ன மறுநிமிடமே, எனது மகனிடம் சிகிச்சைக்கு தேவையான பணத்தை கொடுத்தார். அந்த உதவியினால்தான் எனது கால் குணமடைந்து நான் தற்போது நலமுடன் இருக்கிறேன்

என உயிர்காத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை வாழ்நாள் முழுவதும் நினைவு கூறுவேன் என கண்ணீர் மல்க கூறியுள்ளார்.