விளையாட்டு

நாளை தொடங்கும் ஐபிஎல் திருவிழா – சி.எஸ்.கேவை எதிர்கொள்ள சென்னை வந்தது ஆர்.சி.பி அணி..!!

நடப்பாண்டுக்கான ஐ.பி.எல். போட்டிகள் நாளை (மார்ச் 22) முதல் நடைபெறவுள்ளன. இந்த போட்டியில் தலா ஐந்து முறை ஐ.பி.எல். கோப்பையை வென்ற சிஎஸ்கே (சென்னை), எம்ஐ (மும்பை) அணிகளுடன் மேலும் 8 அணிகள் பங்கேற்கின்றன.

இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை மார்ச் 18-ம் தேதி நடைபெற்றது.

இந்த போட்டியில் பங்கேற்பதற்காக, சிஎஸ்கே அணியின் வீரர்கள் எப்போது சென்னை வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சிஎஸ்கே அணியின் கேப்டன் டோனி கடந்த 5-ம் தேதி சென்னை வந்தடைந்தார். தொடர்ந்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் அடுத்தடுத்து சென்னை வந்தடைந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நேற்று காலை சென்னை வந்தடைந்தனர். ஆர்.சி.பி. அணியின் கேப்டன் விராட் கோலியை அவரது ரசிகர்கள் பெரும் ஆரவாரத்துடன் காலையிலேயே விமான நிலையத்தில் வரவேற்றனர். அத்துடன் சிஎஸ்கே அணியின் கேப்டன் டோனி பெயரும் கூறி ஆரவாரம் செய்தனர். விராட் கோலி எப்போது சென்னை வருவார், அவரை எப்போது பார்ப்போம் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் அவர் சென்னை வந்திருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுவதுமான கோலி மிஸ் செய்தார். கோலி – அனுஷ்கா சர்மா தம்பதியர் இரண்டாவது குழந்தையை வரவேற்றது இதற்கு காரணமாக அமைந்தது.

இந்த நிலையில் தொழில்முறை கிரிக்கெட் போட்டிகளில் விளையாட அவர் களம் திரும்பி உள்ளார். ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த வீரர், 16 சீசன்களாக ஒரே அணிக்காக விளையாடிய வீரர் என குறிப்பிடத்தக்க சாதனைகளை தன் வசம் கோலி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் என்ற அணியின் பெயரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என மாற்றப்பட்டுள்ளது.