இந்தியா

கர்நாடகாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை மீட்பு..!!!

கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டம் இண்டிகா அருகில் லச்யான் கிராமம் உள்ளது. இங்கு வசிக்கும் சதீஷ் முஜகொண்டா (29) – பூஜா (25) தம்பதிக்கு சாத்விக் (2) என்ற ஆண் குழந்தை உள்ளது.

சதீஷின் தந்தை சங்கரப்பா விவசாய தேவைக்காக வீட்டுக்கு அருகிலுள்ள தனது நிலத்தில் 30 அடி ஆழத்துக்கு ஆழ்துளை கிணறு தோண்டினார். ஆனால் நீர் கிடைக்காததால், அதை பாதியிலேயே கைவிட்டார். இந்நிலையில், அங்கு விளையாடிக் கொண்டிருந்த சாத்விக், கடந்த புதன்கிழமை மாலை 6 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் விஜயபுரா மாவட்ட தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

ஆனால் உடனடியாக குழந்தையை மீட்பதில் சிரமம் ஏற்பட்டதால் விஜயபுரா மாவட்ட ஆட்சியர் பூபாலன் மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து குல்பர்கா, பெலகாவி, ஹைதராபாத் ஆகிய இடங்களில் இருந்து மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

குழந்தை சிக்கியிருந்த ஆழ்துளை கிணற்றுக்குள் ஆக்ஸிஜன் செலுத்தி, கேமராவை நுழைத்து கண்காணித்தனர். சுமார் 20 அடி ஆழத்தில் குழந்தை சிக்கி இருந்ததையும், அதன் அசைவுகளையும் மீட்பு படையினர் கேமரா மூலம் கண்டறிந்தனர்.

இதையடுத்து ஆழ்துளை கிணற்றுக்கு பக்கவாட்டில் சுமார் 20 அடிக்கு பள்ளம் தோண்டினர். 20 மணி நேர தொடர் போராட்டத்துக்கு பிறகு, குழந்தை சாத்விக்கை மீட்பு படையினர் உயிருடன் மீட்டனர்.

மீட்கப்பட்ட குழந்தையைக் கண்டு அவரது பெற்றோரும் உறவினர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.