உலகம்

பிரான்ஸ் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து – 5 குழந்தைகள் உட்பட 10 பேர் பலி..

பிரான்சின் கிழக்கு பகுதியில் உள்ள லியோன் நகரின் புறநகர் பகுதியில் உள்ள ஏழு மாடிகள் கொண்ட குடியிருப்பு உள்ளது. இங்கு அதிகாலை 3 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென குடியிருப்பு முழுவதும் பரவியதால், தூக்கத்தில் இருந்த மக்கள் அலறியடித்து ஓடினர். தகவல் அறிந்து சுமார் 65 தீயணைப்பு வாகனங்களில் 170 வீரர்கள் தீயை அணைக்க விரைந்தனர்.

இந்த தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 5 பேர் குழந்தைகள். 14 பேர் காயமடைந்துள்ளதாகவும், அதில் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் இருவரும் காயமடைந்துள்ளனர். விபத்துக்கான காரணம் தெளிவாக தெரியவில்லை. ஆனால், தரைதளத்தில் துவங்கிய தீ மேல்நோக்கி குடியிருப்பு முழுவதும் பரவியதாக அங்குள்ள மக்கள் தெரிவித்தனர்.