ரேஷன் கடைகளில் பாமாயில் திருட்டு.. மடக்கிபிடித்த பொதுமக்கள்…
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள எண்டப்புளி கூட்டுறவு நியாய விலைக்கடைக்கு உட்பட்ட கடை எண் 5ல் விற்பனையாளராக அழகர் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் இன்று பணியின் போது பொது மக்கள் விநியோகத்திற்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 50 லிட்டர் பாமாயில் பாக்கெட்டை திருட்டுத்தனமாக கடத்தியுள்ளார்.
தகவலறிந்த பொதுமக்கள் கடத்தலில் ஈடுபட்ட நபரிடம் இருந்த 50 லிட்டர் பாமாயில் பாக்கெட்டை பறிமுதல் செய்து பெரியகுளம் வட்ட வழங்கல் அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில் விரைந்து வந்த வட்ட வழங்கல் அலுவலர் ஜலால் விற்பனையாளரிடம் விசாரணை செய்து சோதனை நடத்தியதில் 60 லிட்டர் பாமாயில் இருப்பு குறைந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால் ஒரு லிட்டருக்கு 75 ரூபாய் வீதம் 60 லிட்டருக்கு 4500 ரூபாய் அபராதம் விதித்து விற்பனையாளர் மீது நடவடிக்கை மேற்கொண்டார் வட்ட வழங்கல் அலுவலர் ஜலால். அதன்பின் பொதுமக்கள் பறிமுதல் செய்து வைத்திருந்த 50 லிட்டர் பாமாயில் பாக்கெட்களை மீட்டு உணவுப் பொருள் சேமிப்பு கிடங்கில் ஒப்படைத்தார்.
