அரசியல்

தமிழகத்திற்கு 1 கோடி தடுப்பூசிகள்… மத்திய அரசு விளக்கம்…

தமிழகத்துக்கு போதுமான தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கவில்லை என முதல்வர் ஸ்டாலினும், அமைச்சர்களும் கூறி வந்த நிலையில், ஜூன் 2 ஆம் தேதி வரை 1 கோடிக்கும் அதிகமான கோவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார துறை விளக்கம் அளித்துள்ளது.

தமிழகத்தில் தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை நிலவுவதாக சில ஊடகங்களில் செய்தி வெளியிட்டிருப்பது அடிப்படை ஆதாரமற்றவை என மத்திய சுகாதார துறை மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2021 ஜூன் 2 ஆம தேதி வரை தமிழ்நாட்டிற்கு ஒரு கோடிக்கும் அதிகமான டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றுள் 93 லட்சத்து 3 ஆயிரம் டோஸ் மருந்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தமிழக அரசின் கையிருப்பில் 7 லட்சத்து 24 ஆயிரம் தடுப்பூசிகள் உள்ளன. ஜூன் 15 ஆம் தேதி வரை 7 லட்சத்து 48 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்படும். வரும 15 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை 18 லட்சத்து 36 ஆயிரம் டோஸ் தடுப்பு மருந்துகள் கூடுதலாக வழங்கப்படும் தெரிவித்துள்ளது.

மொத்தம் கிடைக்கும் கோவிட் தடுப்பூசிகளின் அளவு, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சராசரி நுகர்வு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மூன்றாவது கட்ட தடுப்பூசி திட்டத்தில் 18 வயது முதல் 44 வயதுடையவர்களுக்கு ஜூன் மாதம் முதல் 16 லட்சத்து 83 ஆயிரம் தடுப்பூசிகள் கிடைக்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.