Uncategorizedதமிழ்நாடு

காற்றில் பறந்த தனிமனித இடைவெளி… தடுப்பூசி முகாமில் குவிந்த மக்கள்…

புதுக்கோட்டை நகர்மன்றத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமில் ஏராளமானோர் குவிந்ததால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு வந்த போலீசார், பொதுமக்களை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் தடுப்பூசிகள் போடும் பணி நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டையில் இதுவரை ஒன்றரை லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளன. தொடர்ந்து தடுப்பூசி போடும் பணி இன்று புதுகை நகர்மன்றத்தில் இன்று காலை துவங்கியது. தற்போது குறைந்த அளவே தடுப்பூசி உள்ளதாக கூறப்படும் நிலையில், தடுப்பூசி போட்டுக்கொள்வதில் பொதுமக்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டினர். இதனால் ஒரே நேரத்தில் அதிக அளவில் மக்கள் குவிந்ததால் நகர்மன்றத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதிகாரிகளின் சரியான திட்டமிடாத காரணத்தால், பொதுமக்கள் அதிகளவில் குவிந்துள்ளதாகும், தடுப்பூசி செலுத்தும் பணியில் குறைந்த அளவிலான பணியாளர்கள் உள்ளதாகவும் சமூக ஆரவலர்கள் குற்றம்சாட்டினர். அதே நேரத்தில் தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று பொதுமக்களிடம் சுகாதார துறை பணியாளர்கள் அறிவுறுத்தினர். ஆனாலும், சுகாதார துறை பணியாளர்களின் அறிவுறுத்தலை பொதுமக்கள் ஏற்பதாக இல்லை என்பதை அங்கு பார்க்க முடிந்தது.