கணவரின் பெயரில் போலி டுவிட்டர் கணக்கு…! ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்த நடிகை சுஹாசினி!
நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் டுவிட்டர், முகநூல், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் கணக்குகள் வைத்து கருத்துக்கள் பதிவிடுவதுடன் தங்களுடைய புதிய படங்கள் பற்றிய தகவல்களையும் வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் . இவர்கள் பெயரில் மர்ம ஆசாமிகள் பல போலிகணக்குகளை தொடங்குவதும் அவற்றை உண்மை என்று நம்பி ரசிகர்கள் பின் தொடர்வதும் வழக்கமான ஒன்று தான் .
இந்நிலையில் தமிழில் இதயகோவில், மவுன ராகம், நாயகன், அக்னி நட்சத்திரம், அஞ்சலி, தளபதி, ரோஜா, பம்பாய், இருவர், அலைபாயுதே, கன்னத்தில் முத்தமிட்டால், ஓ காதல் கண்மனி உள்ளிட்ட பிரமாண்ட படங்களை இயக்கிய தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான மணிரத்னம் பெயரிலும் டுவிட்டரில் போலி கணக்கை உருவாக்கி உள்ளனர்.

அவரது பிறந்தநாளில் டுவிட்டர் பக்கத்தில் இணைவதாக மணிரத்னம் புகைப்படத்துடன் இந்த போலி கணக்கை தொடங்கி உள்ளனர். இதனை ரசிகர்கள் பலரும் உண்மை என்று நம்பி பின்தொடர ஆரம்பித்து உள்ளனர்.

இதையடுத்து இது போலி கணக்கு என்பதை மணிரத்னம் மனைவியும் நடிகையுமான சுஹாசினி தெளிவுபடுத்தியுள்ளார் . அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இயக்குனர் மணிரத்னம் டுவிட்டர் பக்கம் தொடங்கி இருப்பதாக ஒருவர் பதிவு வெளியிட்டுள்ளார். இது பொய். அந்த போலி நபர் கணக்கில் எச்சரிக்கையாக இருங்கள்’’ என்று கூறியுள்ளார்.
