அரசியல்

கொரோனா பலி இரு மடங்கு உயர்வு… முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வேதனை…

தமிழக அரசின் நடவடிக்கையால் கொரோனா பரவல் சற்று குறைந்தாலும், உயிரிழப்பு எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டினார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார். தொடர்ந்து பேசிய ஆர்.பி.உதயகுமார், கடந்த மே மாதம் 7 ஆம் தேதியுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது கொரோனா பரவல் தாக்கம் ஒரு பங்காக குறைந்தாலும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக கூறினார். கொரோனா பாதிப்பு தொற்று குறைவது, தற்போது மனித குலத்திற்கு மகிழ்ச்சியான செய்தியாக இருந்தாலும், கடந்த மே மாதம் மட்டும் 10 ஆயிரம் நபர்கள் கொரோனாவால் உயிரிழந்தாக கூறினார். அதற்கு முன்பு ஓராண்டில் கொரோனாவால் 14,000 நபர்கள் இறந்துள்ளனர். தற்போது தினசரி 500 நபர்கள் கொரோனாவால் பலியாகி வருவதாக அரசுத் தரப்பில் கூறப்பட்டு வந்தாலும், காய்ச்சல் மரணங்களையும் சேர்த்து பார்த்தால் 700 முதல் 1000 வரை இறப்பதாக வருகின்ற புள்ளி விவர கணக்கு நமது மனித குலத்திற்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வந்ததால் தினசரி பாதிப்பு, மக்களின் ஒத்துழைப்போடு குறைந்து வருவது சற்று ஆறுதல் அளிப்பதாக கூறினார். தமிழகத்தில் மக்களின் உயிரைக் காக்க போர்க்கால அடிப்படையில் குறுகியகால அவகாசத்தில் தடுப்பூசி போடும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இரண்டாவதாக கொரோனா உயிரிழப்பை தவிர்க்க போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வேண்டுகோள் விடுத்தார்.