சசிகலா குழப்பத்தை விளைவிக்க முயல்கிறார்… எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு…
சட்டமன்ற எதிர்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அவரது தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியடைந்த நிலையில், முதல் முறையாக சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பிறகு, எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, செய்தியாளர்களைச் சந்தித்தார். அதிமுக தொண்டர்களிடம் சசிகலா தொலைபேசியில் பேசி வருவது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த எதிர்கட்சி தலைவர், அதிமுகவில் சசிகலா இல்லை என்றும், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின்போது, அரசியலில் இருந்து சசிகலா விலகிவிட்டதாக அறிக்கை வெளியிட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினருடன் சசிகலா பேசி வருவதாகவும், அதிமுகவினரோடு அவர் பேசவில்லை என்றார். அதிமுகவில் திட்டமிட்டு குழப்பத்தை விளைவிப்பதற்காகவே சசிகலா ஆடியோக்களை வெளியிட்டு வருவதாகவும், அதிமுக பலமுள்ள எதிர்கட்சியாக உள்ளது என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
