அரசியல்

கொரோனா பரிசோதனையை அதிகரியுங்கள்… தமிழக அரசுக்கு எடப்பாடியார் வேண்டுகோள்…

தமிழகத்தில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்றும் பரிசோதனை முகாம்களை அதிகரிக்க வேண்டும் என்றும் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டார்.

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: 2020 ஜூன் மாதத்தின்போது உச்சபட்சமாக 6900 பேர் நாள் ஒன்றுக்கு கொரானா வைரசால் பாதிக்கப்பட்டனர். ஆனால் இன்றைய தினம் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரமாக உள்ளது என்றார். இது கிட்டதட்ட 4 மடங்கு உயர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார். கொரோனா வைரஸ் பாதித்தவர்களை கண்டறிவதற்காக பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்றார். 2020 ஜூன் மாதத்தின்போது நாள் ஒன்றுக்கு 80 ஆயிரத்தில் இருந்து 90 ஆயிரம் வரை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தற்போது ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனையை அதிகரிக்க வேண்டும். தான் முதலமைச்சராக இருந்த போது, 24 மணி நேரத்தில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை அறிவிக்கப்பட்து. ஆனால் இன்றைய தினம் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களுக்கு 3 – 4 நாட்களுக்கு பிறகுதான் முடிவு அறிவிக்கப்பட்டு வருவதாக கூறினார். காலதாமதம் காரணமாக கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் அனைத்து பகுதிகளுக்கும் தங்குதடையின்றி சென்று வருகிறார்கள் என்றும் இதனால் நோய் பரவல் அதிகரிக்கும் என்றும் கூறினார். மேலும் பரிசோதனை முடிவுகளை 24 மணி நேரத்தில் தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசைக் கேட்டுக் கொண்டர்.

மேலும், அதிமுக அரசின்போது, வீடு வீடாக சென்று பொதுமக்களைச் சந்தித்து நோய் அறிகுறி கண்டறிந்து அவர்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் தற்போது அவ்வாறு இல்லை என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.