“மேம்படுத்தப்பட்ட வாட்ஸ் அப்”… ‘புகைப்படம் – வீடியோ’ பார்த்தவுடன் மறையும் புதிய அம்சம்…
வாட்ஸ் அப் பயன்பாடு என்பது மக்களோடு மக்களாக ஒன்றி பிணைந்துவிட்டது என்றே கூறலாம். ஸ்மார்ட் போன், ஐபோன் வைத்துள்ள அனைவரும் வாட்ஸ்அப் பயன்படுத்தி வருகின்றனர். நண்பர்களின் வாழ்த்துக்கள், உறவினர்களின் வாழ்த்துக்கள் தொடங்கி தங்களுக்கு பிடித்த விஷயங்களை வாட்ஸ் அப் மூலம் பகிர்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில், வாட்ஸ் அப் பக்கத்தில் பல்வேறு அப்டேட்கள் அதிகரித்து வருகின்றன. தற்போது அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. அது என்னவென்றால், வியூ ஒன்ஸ் என்ற அப்டேட்தான். ஒருவர் வாட்ஸ் அப் எண்ணுக்கு பகிரப்படும் புகைப்படங்கள், வீடியோக்கள் ஒரு முறை பார்க்கப்பட்ட பின்னர், சாட்டில் இருந்து தானாகவே மறைந்து விடும் வகையில் புதிய அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது.
புகைப்படமோ, வீடியோவோ பெறுபவரின் கேலரியில் சேமிக்கப்பட முடியாது என்றும் வாட்ஸ் அப் வழியாக மற்றொருவருக்கு அவற்றை அனுப்ப இயலாது என்றும் கூறப்படுகிறது. கேப்ஷன் பார் அருகில் தோன்றும் ஒன்று என்ற ஐகானை பயன்படுத்துவதன் மூலம் வியூ ஒன்ஸ் வசதியை நாம் பயன்படுத்தலாம்.
தற்போதைய வாட்ஸ்அப் அப்டேட், ஐபோன் பயனாளர்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும் விரைவில் ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கும் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆண்ட்ராய்டு போன் வைத்துள்ளவர்கள் எப்போது இந்த அப்டேட் கிடைக்கும் என்று காத்துக் கிடக்கின்றனர்.