அரசியல்தமிழ்நாடு

கடுமையான போட்டியில் இறுதியில் நோட்டாவே வென்றது….வாங்கிய வாக்குகள் எத்தனை..?

பொதுவாக தமிழக அரசியலுக்கும் சினிமாவுக்குமான நெருக்கம் அதிகம், வேறு எந்த மாநிலத்திலும் இல்லாதது. எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா என்று தமிழகத்துக்கு அதிகளவிலான முதல்வர்களைத் தந்தது தமிழக சினிமாதுறை தான்.

அதேபோல் இந்தத் தேர்தலிலும் நடிகர் கமலும், முன்னாள் இயக்குனரும், நடிகருமான சீமானும் மிகப்பெரிய பங்கு வகித்திருக்கிறார்கள். இவர்களுடைய கட்சிகள் ஒரு தொகுதியிலும் வெற்றி பெறாவிட்டாலும், சீமானின் நாம் தமிழர் கட்சி யாருடனும் கூட்டனி வைக்காமல், 234 தொகுதிகளிலும் வேட்பாளரை நிறுத்தி, பரவலாக ஓட்டுக்கள் வாங்கியதில் தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக வளர்ந்திருக்கிறது.

ஆனால், சீமானோ தான் போட்டியிட்ட திருவொற்றியூர் தொகுதியில், 48 ஆயிரத்து 597 ஓட்டுக்கள் மட்டுமே வாங்க முடிந்தது. அங்கு அவருக்கு மூன்றாவது இடம்தான் கிடைத்தது. கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல், முதலில் இருந்தே முதலிடத்தில் இருந்து, கடைசியில் 1,728 ஓட்டுக்கள் வித்தியாசத்தில், பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசனிடம் தோற்றார்.

இவர்களது நிலை இப்படியிருக்க ‘நானும் நடிகன்தானே, எனக்கும் பேன்ஸ் இருக்கு, மக்கள் ஓட்டுப்போடுவார்கள்’ என்று நம்பி, தேர்தல் களத்தில் குதித்த காமெடி நடிகர்கள் மயில்சாமி மற்றும் மன்சூர் அலிகானின் நிலை மிகப்பெரும் காமெடியாகிவிட்டது. விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட மயில்சாமிக்கு, 1,440 ஓட்டுக்கள் கிடைத்தன. அங்கு நோட்டாவுக்கு, 1,563 ஓட்டுக்கள் பதிவாகியுள்ளன.

‘நானும் கோயம்புத்துாருதானுங்க’ என கூறி, கோவைக்கு வந்து, தொண்டாமுத்துாரில் போட்டியிட்டார் நடிகர் மன்சூர் அலிகான். ‘அமைச்சரிடம் எவ்வளவு பணம் வாங்குனீங்க’ என்று யாரோ கேட்டார்கள் என்று வேட்புமனுவை வாபஸ் பெறப்போய், திரும்ப அந்த முடிவையும் வாபஸ் பெற்று, போட்டியிட்ட அவருக்குக் கிடைத்த வாக்குகள் வெறும், 428 மட்டுமே. அந்தத் தொகுதியில் நோட்டா 1,622 , இவரை விட மூன்று மடங்கு அதிகம் பெற்றிருந்தது. இறுதியில் திரையிலும் காமெடி அரசியலிலும் காமெடி என்றாகிவிட்டது.