வணிகம்

இந்திய பங்குச்சந்தை நிலவரம்

கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும், தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் குறைந்து வருவதால் மும்பை பங்குசந்தை சென்செக்ஸ் 50 ஆயிரம் புள்ளிகளை கடந்தும், நிப்டி 15 ஆயிரம் புள்ளிகளை கடந்தும் வர்த்தகமாகின்றது.

கொரோனா தொற்று பாதிப்பு கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவில் அதிகரிக்க தொடங்கின. இரண்டாம் அலை மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. மே 6-ம் தேதி இதுவரை எந்த நாடும் சந்தித்திராத அளவு ஒரே நாளில் 4.1 லட்சம் பேரிடம் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் தொற்று பாதிப்பை குறைக்க பல மாநிலங்களும் ஊரடங்கு நடவடிக்கை எடுத்தன. இதனால் பிப்ரவரியில் 50 ஆயிரம் புள்ளிகளை கடந்து வர்த்தகமான சென்செக்ஸ் ஏப்ரலில் 8 சதவீதம் அளவு சரிவடைந்தது.

மத்திய அரசு தேசிய அளவிலான ஊரடங்கு முடிவை எடுக்காத காரணத்தால் பங்குச்சந்தைகள் பெரிய பாதிப்பை மார்ச் மற்றும் ஏப்ரலில் சந்திக்கவில்லை. இந்நிலையில் இன்று (மே 18) மீண்டும் சென்செக்ஸ் 50 ஆயிரம் புள்ளிகளை கடந்துள்ளது. நிப்டி 15 ஆயிரம் புள்ளிகளை கடந்துள்ளது. கடந்த 10 நாட்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை குறைவதும், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை குறைவதும் சந்தைக்கு சாதகமான அம்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொற்று பாதிப்பு குறைவதால் ஜூனில் ஊரடங்கு இருக்காது என்ற செய்தியும் பங்குச்சந்தைகளுக்கு ஏற்றத்தை தந்துள்ளது. மேலும் இந்திய சந்தையில் புதிய தடுப்பூச்சிகளை அனுமதிக்க எடுத்துள்ள முடிவு, இளைஞர்களுக்கும் தடுப்பூசி திட்டம் ஆகியவற்றால் தடையற்ற பொருளாதார நடவடிக்கை முன்னோக்கி செல்கிறது.