தமிழகத்தில் ஊரடங்கை கடுமையாக்க தேவைப்பட்டால் துணை ராணுவத்தை அழைக்க வேண்டும் – டாக்டர் ராமதாஸ்
தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடுமையாக்க, தேவைப்பட்டால் துணை ராணுவத்தை அழைக்க வேண்டும் என டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்
இதுகுறித்து டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறிருப்பதாவது : தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஓரளவு குறைந்தாலும், உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அது குறித்த எந்த கவலையும், பொறுப்பும் இல்லாமல் சாலைகளில் வாகனங்களில் வலம் வருவோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்திருப்பது மிகவும் அச்சம் அளிக்கிறது.
ஒரு சில நகரங்களைத் தவிர மற்ற நகரங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி ஊர் சுற்றுவோரை கட்டுப்படுத்த அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.
இந்தியாவிலேயே தினசரி தொற்று 30 ஆயிரத்திற்கும் அதிகமாக 33,000 என்ற அளவைக் கடந்திருப்பது தமிழ்நாட்டில் மட்டும் தான். இதற்குக் காரணம் தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அரசாலும், மக்களாலும் மதிக்கப்படாமல் காற்றில் பறக்கவிடப்படுவது தான். தமிழக அரசுக்கு மீண்டும் மீண்டும் நான் சொல்வது என்னவென்றால் மக்களைக் காக்க வேண்டிய பெரும் கடமை அரசுக்கு உள்ளது. அதற்கு சில கடுமையான நடவடிக்கைகளை எடுத்து தான் ஆக வேண்டும்.
ஊரடங்கை கடுமைப்படுத்துவதற்காகவும், சாலைகளில் வாகனப் போக்குவரத்தைத் தடுப்பதற்காகவும் தமிழக சிறப்புக் காவல்படை, ஆயுதப்படை, ஊர்க்காவல் படை ஆகியவற்றை சாலைகளில் நிறுத்த வேண்டும். தேவைப்பட்டால் மத்திய துணை ராணுவப் படைகளையும் தமிழகத்திற்கு அழைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் .
