தமிழகத்தில் கரும்பூஞ்சைக்கு முதல் பலி…மேலும் ஐவர்.?
தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே
பட்டறை உரிமையாளர், கரும்பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்தியாவில் சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தொற்றில் இருந்து மீண்ட நோயாளிகள் கரும்பூஞ்சை நோயால் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், கர்நாடகா, மஹாராஷ்டிரா, தெலுங்கானா, ஹரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தரகண்ட், பீஹார் உள்ளிட்ட மாநிலங்களில் கரும்பூஞ்சை நோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில், கரும்பூஞ்சை நோயின் பாதிப்பு தமிழகத்தையும் சீண்ட தொடங்கி உள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் முதல் பலி பதிவாகியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள நரசிம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்த வெல்டிங் பட்டறை உரிமையாளர் வயது 57, கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தார். கோவில்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு, கரும்பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த 17ம் தேதி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (மே 20) உயிரிழந்துள்ளார்.
மேலும் ,சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 5 சர்க்கரை நோயாளிகளும் கரும்பூஞ்சை நோயின் தாக்கத்தில், சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த நோய் காது, மூக்கு, தொண்டை பகுதியை பாதிக்க கூடிய அபாயம் உள்ளது என்பதால் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
