எங்களது நடவடிக்கையால் முன்பை விட நோய்த்தொற்று குறைந்துள்ளது…செந்தில் பாலாஜி
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா நோய் தடுப்பு பணிகள் குறித்து அரசு அதிகாரிகளுடன் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர், சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன் ஆகியோர் பங்கேற்றார்கள்.
அப்போது அந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு படுக்கை வசதி இல்லை என்கிற நிலையை மாற்ற தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், சேலம் மாவட்டம் 177 மண்டலமாக பிரிக்கப்பட்ட நிலையில் அதில் சுகாதாரம், வருவாய் மற்றும் காவல் துறை அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர் என்று அமைச்சர் கூறினார்.
மேலும் ஒரு மண்டலத்திற்கு இரவு பகல் என 2 குழுக்கள் வீதம் மொத்தம் 354 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என்றும் இந்த குழுக்கள் கொரோனா நோய் தடுப்பு பணிகளை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கூறினார். அதோடு இவர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகளை பயன்படுத்தி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களின் அனைத்து வசதிகளையும் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவரவர் பகுதியில் முழு ஊரடங்கை கடைப்பிடிக்க செய்ய வேண்டும்; இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் யாருடைய சிபாரிசையும் ஏற்றுக்கொள்ள கூடாது என்றும் நடமாடும் வாகனங்கள் மூலம் மட்டுமே காய்கறிகளை விற்பனை செய்ய வேண்டும் என்றும், சந்தைகளை அனுமதிக்க கூடாது.தேர்தல் பணியில் செயல்பட்டது போல அலுவலர்கள் சுதந்திரமாக செயல்படலாம் எனவும் கூறினார்.
அதோடு கடந்த 13 ம் தேதி 13.32 சதவீதமாக இருந்த நோய் தொற்று அரசின் நடவடிக்கையால் 10.9 சதவீதமாக குறைந்துள்ளது என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
