ஆர்டர் கொடுத்தால் வீட்டுக்கே மதுவிற்பனை…
மொபைல் ஆப் அல்லது இணையதளம் மூலமாக முன்பதிவு செய்பவர்களுக்கு வீடுகளுக்கே சென்று மதுபானம் சப்ளை செய்ய டில்லி அரசு அனுமதி அளித்துள்ளது.
டில்லியில் கொரோனா பாதிப்பு குறைந்ததை தொடர்ந்து, அங்கு அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு ஜூன் 7 வரை நீட்டிக்கப்பட்டாலும், அதில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் டில்லி அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளதாவது,
ஆன்லைன் அல்லது மொபைல் ஆப் மூலம் முன்பதிவு செய்பவர்களின் வீடுகளுக்கே மது மதுசப்ளை செய்யலாம். விடுதிகள், அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு சென்று மதுசப்ளை செய்ய அனுமதி கிடையாது. எல்-13 லைசென்ஸ் பெற்றவர்கள் மட்டுமே மது விநியோகம் செய்யும் பணியில் ஈடுபட வேண்டும். தேவையான உரிமங்களை வைத்திருப்பவர்களுக்கு, மொட்டை மாடி , பார்கள் மற்றும் உணவகங்கள் போன்ற திறந்த வெளிகளில் மதுபானம் சப்ளை செய்யலாம். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.
கடந்த மார்ச் மாதம் மது தொடர்பான கொள்கையில் டில்லி அரசு மாற்றம் செய்தது. இதன்படி, வருவாயை அதிகரிக்கும் நோக்கில் மது அருந்துவதற்கான வயதை 25ல் இருந்து 21 ஆக குறைத்தது. மேலும் டில்லி அரசு மதுபானக்கடைகளை நடத்தாது எனவும், டில்லியில் புதிய கடைகள் திறக்கப்படாது எனவும் டில்லி அரசு அறிவித்திருந்தது.
சத்தீஸ்கர், மஹாராஷ்டிரா, கர்நாடகா, பஞ்சாப், ஜார்க்கண்ட், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் வீடுகளுக்கே மதுபானம் சப்ளை செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
