பிறந்தநாள் பரிசாக தடுப்பூசி தாருங்கள்…! தமிழக அமைச்சரிடம் …சூசக கோரிக்கை விடுத்த மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி ராஜா…!
தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியனுக்கு தாமதமாக பிறந்தநாள் வாழ்த்துகளை சொல்லியது மட்டுமில்லாமல் பிறந்தநாள் பரிசாக மன்னார்குடிக்கு தடுப்பூசி தாருங்கள் என எம்எல்ஏ டிஆர்பி ராஜா சூசக கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைவரும் கட்டாய தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது . ஆனால் தமிழகத்திற்கு குறைவான தடுப்பூசிகளையே மத்திய அரசு வழங்கியதால் தமிழகத்தில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவிவருகிறது .
இந்நிலையில் சர்வதேச டெண்டர்களை தமிழ்நாடு அரசு கோரி வருகிறது. மேலும் செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி உற்பத்தி மையத்தை திறந்துவிடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள மா சுப்பிரமணியன் அவர்களுக்கு கடந்த 1ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இவரது பிறந்தநாளை மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி ராஜா மறந்துவிட்டார் போல. அடுத்த நாள் ஜூன் 2ஆம் தேதி தாமதமாக பிறந்தநாள் வாழ்த்துகளை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
அதில் அண்ணன் அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்களுக்கு தாமதமான பிறந்தநாள் வாழ்த்துகள். நமது முதல்வர் எதிர்பார்த்தபடியே சுகாதாரத் துறையில் உங்கள் பணிகளை சிறப்பாக செய்கிறீர்கள். உங்களது பிறந்த நாள் பரிசாக #மன்னார்குடிக்கு #தடுப்பூசி தாருங்கள் அண்ணா என கேட்டுள்ளார்.
பொதுவாக நகைச்சுவையாக பேசக்கூடியவர் டிஆர்பி ராஜா அதை பல மேடை பேச்சுக்களில் நாம் காண வாய்ப்பு உண்டு .இந்நிலையில் தங்கள் தொகுதிக்கு தடுப்பூசி தேவை என்பதை பிறந்தநாள் பரிசாக சமூகவலைத்தளத்தில் சூசகமாக கேட்டது சற்று நகைப்பை வரவழைக்கிறது.
