அரசியல்தமிழ்நாடு

“நீட் ஏழை எளிய குடும்பங்களுக்கு வரப்பிரசாதம்”… தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சு…

திமுக ஆட்சி பொறுப்பேற்று 70 நாட்கள் ஆகியும் ஒரு வாக்குறுதியைக்கூட நிறைவேற்றவில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், இனி பாஜகதான் தமிழகத்தின் எதிர்காலம் என்றும், பாஜகவின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது என்றார். தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பாஜகவின் சித்தாந்தத்தை கொண்டு செல்வதே இலக்கு எனக் கூறினார்.

70 நாட்கள் ஆகியும் ஒரு வாக்குறுதியைக்கூட திமுக நிறைவேற்றவில்லை என்றும் எதற்காக நீட் தேர்வு வேண்டாம் என்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை என்றார். நீட் தேர்வு நல்லது என்று அனைத்து பகுதிகளிலும் பாஜக விழிப்புணர்வு ஏற்படுத்தும், நீட் தேர்வு வந்த பிறகு ஏழை மாணவர்கள் கல்வி பயில முடிகிறது. நீட் ஏழை எளிய குடும்பங்களுக்கான வரப்பிரசாதமாக இருக்கிறது. நீட் தேர்வு நல்லது என்று வீதி வீதியாக சென்று மக்களிடம் சொல்வோம் என கூறினார்.

மத்திய அரசு தடுப்பூசி குறைவாக வழங்குகிறது. ஆனால் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தமிழக அரசு பொய் புகார் கூறுவதாக குற்றம் சாட்டினார். கொங்குநாடு விவகாரத்தில் குழப்பம் இல்லை. உணர்ச்சிப்பூர்வமாக அரசியல் செய்வது பாஜக அல்ல. ஒன்றிய அரசு என கூறுவதற்கு எதிராக கொங்குநாடு என கூறவில்லை என்றார்.

ஊடகங்களின் மீது பாஜக மிகப்பெரிய மதிப்பு வைத்துள்ளது. ஐ.டி சட்டத்தில் உள்ள ஊடக நெறிமுறைகள் என்ற பிரிவைப் பற்றித்தான் நான் பேசினேன். ஊடக நெறிமுறைகள் பற்றி நான் பேசியதை தவறாக சித்தரித்துள்ளதாகவும் அண்ணாமலை கூறினார்.