பப்ஜி மதனுக்கு எதிரான குண்டர் சட்டம் ரத்து..!
பப்ஜி மதனுக்கு எதிரான குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
யூடியூப் சேனல்களில் பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுக்களில் ஆபாசமாக பேசி கொண்டு விளையாடியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், சில மாதங்களுக்கு முன்பு பப்ஜி மதனை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். பெண்களை ஆபாசமாக சித்தரித்து பேசுதல் ,ஆபாசமாக பேசுதல், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட மதன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அத்துடன் அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டமும் போடப்பட்டது. சைபர் சட்ட குற்றவாளி என்பதால் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்ததாக சென்னை மாநகர காவல் ஆணையர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதை எதிர்த்து பப்ஜி மதன் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இதுகுறித்து தமிழக அரசும், சென்னை காவல் ஆணையரும் விளக்கம் அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழக அரசும், சென்னை காவல் ஆணையர் பதில் அளிக்க தாமதம் ஆவதால், இந்த வழக்கை முன்கூட்டியே விசாரிக்க வேண்டும் என மதன் தரப்பில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு சமீபத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில் சென்னை மாநகர காவல் ஆணையர் பிறப்பித்த உத்தரவை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. அதாவது மதன் மீது போடப்பட்ட குண்டர் தடுப்பு சட்டம் இதன்மூலம் ரத்தாகியுள்ளது. பப்ஜி மதன் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது நீதிபதிகள் இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
