Covid19இந்தியா

மும்பையில் அதிகரித்துவரும் கொரோனா : ஒரே நாளில் 500-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு..

மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

நேற்று ஒரே நாளில் 506 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம், மும்பையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 சதவீதம் உயர்ந்துள்ளது.

இதுகுறித்து மும்பை மாநகராட்சி அதிகாரிகள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

போர்க்கால அடிப்படையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. மும்பையில் தினமும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

பருவமழை காலம் என்பதால் சளி, காய்ச்சல் என அறிகுறிகளுடன் நிறைய பேர் பாதிக்கப்படுகின்றனர். 12 வயது முதல் 18 வயதுக்குள்பட்டோர் வரை தடுப்பூசி செலுத்தும் பணிகளை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பரிசோதனை ஆய்வகங்களில் முழு பணியாளர்களுடன் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல், அரசு மருத்துவமனைகளையும் போதுமான பணியாளர்களுடன் தயாராக இருக்குமாறு அறிவுறுத்தியிருக்கிறோம். தனியார் மருத்துவமனைகளுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தால், மும்பை புறநகரில் உள்ள மாலட் பகுதியில் கொரோனா சிகிச்சைக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள ஜம்போ மருத்துவமனை முன்னுரிமை அடிப்படையில் பயன்படுத்தப்படும் என்று மும்பை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

மும்பையில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் மே மாதம் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 100 சதவீதத்துக்கும் அதிகமாகியுள்ளது.