இந்தியா

தொடர் பதற்றத்தில் ஜம்மு- காஷ்மீர்..! பாதுகாப்பு படையினரால் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை…

ஜம்மு-காஷ்மீரில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகவே பயங்கரவாத தாக்குதல்கள் அதிரித்து வருகிறது. இதனால் அங்கு பல பகுதிகளில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக பாதுகாப்பு படையினரும் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர்.

அந்தவகையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் ரிஷிபுரா பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். அப்போது பாதுகாப்பு படையினரின் பதில் தாக்குதலில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பின் முக்கிய தளபதி நிசர் கான்டெ கொல்லப்பட்டார்.

அதேபோல் முன்னதாக, பாரமுல்லா மாவட்டத்தின் சோபோர் நகரில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி ஒருவரும் சில தினங்களுக்கு முன் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்நிலையில் இன்று அதிகாலை குப்வாரா மாவட்டத்தின் சக்தாரஸ் கண்டி பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.

இதில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிகிறது. அவர்களில் ஒருவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து தாக்குதல் நடைபெற்ற பகுதியில் வேறு யாரேனும் பயங்கரவாதிகள் இருக்கிறார்களா என பாதுகாப்புப் படை வீரர்கள் தேடுதல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.