முந்தானையில் முழு உருவப்படம் கனிமொழி படத்துடன் கலக்கும் புடவை பிறந்தநாள் கிப்ட்
தமிழகத்தில் இருக்கும் இருபெரும் கட்சிகளில் ஒன்றான திமுகவில் அனல் பறக்கும் பெண் தலைவராக வலம் வருபவர் கனிமொழி எம் பி .
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 5-ல் கனிமொழி பிறந்தநாள் விழா முக்கியத்துவம் பெறுவது வழக்கம்தான். ஆனால் இந்த ஆண்டு சற்று கூடுதல் உன்னிப்புடன் பார்க்கப்படுகிறது .

வழக்கம்போல கனிமொழி பிறந்தநாள் விழாவை ஒட்டி வாழ்த்து விளம்பரங்கள், சமூக வலைதளங்களில் ரீல்ஸ் என இந்த ஆண்டும் ஜரூராக பலரும் தயாராகி வருகிறார்கள். கூடுதலாக இந்த ஆண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கும் முயற்சிகளிலும் கனிமொழி ஆதவாளர்கள் இறங்கி இருக்கிறார்கள்.
கனிமொழி அண்மையில் துறந்த மகளிர் அணி மாநில செயலாளர் பதவியை கன்னியாகுமரி முன்னாள் எம்.பி- யும், கனிமொழி ஆதரவாளருமான ஹெலன் டேவிட்சன் வசம் ஒப்படைத்து இருக்கிறார்கள். எனவே பிறந்த நாள் கொண்டாட்டங்களில் மகளிர் அணியினர் முக்கிய பங்காற்ற வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

இதன் முன்னோட்டமாக கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மகளிர் அணி பிரமுகர் அம்மு ஆன்றோ ஏற்பாட்டில் கலைஞர், ஸ்டாலின், கனிமொழி படம் பொறித்த சேலைகள் ஆயிரக்கணக்கில் தயார் செய்யப்பட்டுள்ளன. இந்த சேலைகளை நலத்திட்ட உதவிகளாக கனிமொழி பிறந்தநாள் அன்று வழங்க முடிவு செய்து இருக்கிறார்கள்.

மேலும் இந்த சேலையை மும்பை மாடல் ஒருவர் அணிந்தபடி ஒய்யாரமாக போஸ் கொடுக்கும் வீடியோ ரீல்ஸ் ஒன்றை தயார் செய்து, அதனை சமூக வலைதளங்களில் இப்போதே வைரல் ஆக்கி வருகிறார்கள்.

அந்த வீடியோ ரீல்ஸ் பின்னணியில், ‘கனிமொழியே நீ வாழ்க’ எனத் தொடங்கும் பாடல் வரிகளும் ஒலிக்கின்றன. பலரது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் ஆகவும் இந்த பாடல் அலங்கரிக்க ஆரம்பித்து விட்டது.

