அரசியல்தமிழ்நாடு

வெளிநாடுகளில் பணிபுரியும் தமிழர்களின் விவரங்களை வெளியீடுக..! அமித்ஷாவுக்கு திமுக எம்.பி. கலாநிதி கடிதம்..

சென்னை: கடந்த 20 ஆண்டுகளாக வெளிநாடுகளில் பணிபுரியும் தமிழர்களின் விவரங்களை தருமாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் தமிழ்நாடு அரசு, வெளிநாடுகளில் வேலைக்காக செல்லும் தமிழர்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்கள் மற்றும் சவால்களை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், கலாநிதி வீராசாமி எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது;

வெளிநாடுகளில் வேலை செய்வதற்காக குடிப்பெயர்ந்து வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள், அந்நாடுகளில் பணிபுரியும் போது, யாரேனும் சிலர் பாதிப்புக்கு உள்ளாகும் செய்திகள் வரும்போது, அவர்களது துயர் களைய தமிழ்நாடு அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. அத்தகைய நேரங்களில் அவர்களுக்கு உடனடியாக உதவிகள் செய்வதற்காக, ஒரு வழிமுறையை உருவாக்கவும், அதன் மூலம் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களின் விவரங்களை சேமித்து வைப்பதன் மூலம், அவர்களில் யாரேனும் பாதிக்கப்படும் போது, அவர்களுக்கு உடனடியாக உதவி செய்யவும் அவர்களுக்கு ஆயுள் காப்பீடு வழங்கவும், அவர்கள் விரும்பும் போது நாடு திரும்ப வேண்டிய உதவிகள் செய்யவும் தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது,

அதேபோன்று, இந்தியாவில் தங்கியுள்ள இலங்கை தமிழ் அகதிகளுக்கு, ஒன்றிய அரசு, தமிழ்நாடு அரசு கோரியபடி, இந்திய குடியுரிமையை வழங்கும் வரை அவர்கள் துயர் தீர்க்க, அகதிகள் முகாம்களில் அவர்களுக்கு வேண்டிய வசதிகளைச் செய்து தரவும், அவர்களுக்காக வீட்டு வசதி திட்டங்களை உருவாக்கித் தரவும் தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. சமீபத்தில் வெளிநாடு வாழ் தமிழர்களின் நல வாரியத்தின் கூட்டம் அதன் தலைவர் கார்த்திகேய சேனாதிபதி தலைமையில் நடைபெற்றது.

மொரிஷியஸ், சிங்கப்பூர், இங்கிலாந்து, அரபு எமிரேட் ஒன்றியம் மற்றும் மும்பை நகரத்திலிருந்து பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அக்கூட்டத்தில் உலகெங்கும் வாழும் தமிழர்களின் தரவுகளை (data base) உருவாக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மாதிரி கணக்கெடுப்பில் (Sample Survey), சுமார் 22 லட்சம் இந்தியாவைத் தாயகமாக கொண்ட தமிழர்கள் பல உலக நாடுகளில் வாழ்ந்து வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 8 வருடங்களில் இந்த எண்ணிக்கை மேலும் கூடியிருக்கக் கூடிய வாய்ப்பு உள்ளதால், மேற்படி போர்ட் அவர்களின் உண்மையான எண்ணிக்கையை கண்டறிய இக்கூட்டத்தில் முடிவு செய்துள்ளது.

தமிழர்களின் எண்ணிக்கையைக் கண்டறிவதற்காக ஒரு தரவுத்தளத்தை (data base) ஆண்ட்ராய்டு செல்போனில் இதற்காக உருவாக்கப்பட உள்ள ஒரு ஆப் (app) அல்லது ஒரு இணையதளம் உருவாக்கப்படும். உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள தமிழ் சங்கங்கள் இந்த வெளிநாடு வாழ் தமிழர்களின் நல வாரியத்தில் தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படும், இது வெளிநாடு வாழ் தமிழர்களின் விவரங்களைப் பெறுவதற்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் வெளிநாடு வாழ் தமிழர்களின் குழந்தைகளுக்குத் தமிழ் கற்றுக் கொடுக்க தேவையான நடவடிக்கைகளை இந்த நலவாரியம் எடுக்கும். தென் ஆப்பிரிக்க நாட்டின் டர்பன் நகரில் மட்டும் சுமார் 8 லட்சம் தமிழர்கள் வசிக்கின்றனர். அவர்களது முன்னோர் ஏறத்தாழ 200 ஆண்டுகளுக்கு முன்பு அங்கு குடிபெயர்ந்துள்ளனர் அவர்கள், தங்கள் முன்னோர் தமிழ்நாட்டிலிருந்து குடிபெயர்ந்துள்ளனர் என்பதை அறிந்து வைத்துள்ள போதிலும், அவர்களில் பெரும்பாலானோருக்கு தமிழ் மொழி தெரியவில்லை.

தமிழ்நாடு அரசு அவர்களின் குழந்தைகளுக்குத் தமிழ் கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்வது என முடிவெடுத்துள்ளது. மேலும் தமிழ்நாடு அரசின் தமிழ் இணையக் கழகத்தின் மூலம் தமிழ் கற்றுத்தர இயலுமா என்பதும் ஆராயப்படும்.மேலும் வெளிநாடுகளுக்குத் தொழிலாளர்களை அனுப்பும் அமைப்புகள் (ஏஜென்சிகள்) இந்த நலவாரியத்தில் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். தமிழ்நாடு அரசு இவ்வாறு அனுப்பப்படும் தொழிலாளர்களுக்கு ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடுகள் வழங்கவும் திட்டமிட்டுள்ளது. மேலும் அவர்கள், பனிக்காலம் முடிந்து தாய் நாட்டுக்குத் திரும்பும் போது அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கவும் திட்டமிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு, வெளிநாடுகளில் வேலைக்காக செல்லும் தமிழர்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்கள் மற்றும் சவால்களை உன்னிப்பாக கவனித்து வருகின்றது. இதுவரை அமெரிக்கா, சவுதி அரேபியா, சிங்கப்பூர் உள்ளிட்ட 13 நாடுகளில் உள்ள தமிழ் அமைப்புகளுடன் சந்திப்பு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

இக்கூட்டங்களில் பெற்ற விவரங்கள் மூலம் அவர்களது உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்களின் நலத்துக்காகவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன. மேலும் தமிழர்கள் வேலை செய்யும் நிறுவனங்களைப் பற்றிய விவரங்கள், அவர்களை வேலைக்கு அனுப்பிய ஏஜென்சிகளின் விவரங்கள் அவர்கள் பணிபுரியும் இடத்தின் தன்மை, அவர்களின் பணிகள் பற்றிய விவரங்கள் முதலானவற்றை அறிந்து, இணையத்தில் சேமித்து வைத்து அதன் மூலம் அவர்களுக்கு ஏதேனும் இடர் ஏற்படும்போது உடனடியாக அவர்களை தொடர்பு கொண்டு, உதவிகள் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

பல வெளிநாடு வாழ் தமிழர்களின் சங்கப் பிரதிநிதிகள், பணியில் இருக்கும் தொழிலாளர்கள், சில சமயங்களில் விபத்துகளில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்படும் போதோ, அல்லது வேறு காரணங்களினால் ஏற்படும் மரண நிகழ்வுகளின் போது இறந்தவர்களின் உடல்களைத் தாய்நாட்டிலுள்ள அவர்களது உறவினர்களிடம் சேர்ப்பதில் அதிக சிரமங்கள் ஏற்படுவதாகத் தெரிவித்துள்ளனர்.

மேலும், தொழிலாளர்களை வேலைக்கு வைத்துக் கொள்வோர் சில சமயங்களில் தொழிலாளர்களுக்கு தரவேண்டிய ஊதியத்தைக் கொடுக்காமல் ஏமாற்றுவதும், அவர்களின் பணி செய்யும் தன்மை மற்றும் பணிக்காலம் போன்றவற்றில் ஏமாற்றங்கள் செய்வது உண்டு என்றும் வருத்தத்துடன் தெரிவித்தனர்.

தமிழ்நாடு அரசு, இவற்றையெல்லாம் நிவர்த்தி செய்யும் வகையில் நடவடிக்கைகள் எடுக்க திட்டமிட்டுள்ளது. மேலும் எங்களது தமிழக முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டில் வாழும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்குக் குடியுரிமையை வழங்க வேண்டும் என்று ஒன்றிய அரசிடம் கோரி வருகின்றனர். அவ்வாறு, அவர்கள் குடியுரிமை பெறும் வரையில், அவர்கள் வசிக்கும் அகதிகள் முகாமில் அவர்கள் நலம் காக்க பல்வேறு நலத்திட்டங்களையும் அவர்களுக்கு நடைமுறைப்படுத்தி உள்ளனர்.

மேலே கூறிய பணிகளைச் சிறப்பாக செய்திட உதவிடும் வகையில், கடந்த 20 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு வேலை செய்வதுக்காகச் சென்றுள்ள தமிழர்களின் விவரங்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள குடியேற்றத்துறை (இமிகிரேஷன் துறை) மூலம் வழங்கிட ஆவண செய்யுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர். கலாநிதி வீராசாமி இக்கடிதத்தில் கூறியுள்ளார்.