தேடி வந்த காலம் போய் , ஆதரவை தேடி ஓடும் காலம் வந்துவிட்டதே..! ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் ஆதங்கம்…
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக ஓபிஎஸ் அணியும் இபிஎஸ் அணியும் மாறி மாறி கூட்டணி கட்சிகளிடம் சென்று ஆதரவு கேட்டு நிற்பதை பார்த்து வேதனையாக உள்ளது என மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி மாரடைப்பால் மறைந்தார். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டசபை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டிருந்தது. பிப்ரவரி 27ஆம் தேதி இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.

காங்கிரஸ் சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அந்த தொகுதியை அதிமுகவுக்கு விட்டு கொடுத்துவிட்டது. அதனால் அதிமுக சார்பில் ஓபிஎஸ் அணியும் இபிஎஸ் அணியும் போட்டியிட தீவிரமாக ஆதரவு தேடி வருகிறார்கள்

இந்நிலையில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் சென்னை திநகரில் உள்ள கமலாலயத்திற்கு சென்று மாநில தலைவர் அண்ணாமலையை நேரில் சந்தித்து ஆதரவு கேட்டனர். பின்னர் பாஜக போட்டியிட்டால் தாங்கள் ஆதரவு கொடுப்போம் என ஓபிஎஸ் அணி தெரிவித்துள்ளது.
தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியன், புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி உள்ளிட்டோரையும் ஓபிஎஸ்- இபிஎஸ் தனித்தனியே சந்தித்து ஆதரவு கேட்டு வருகிறார்கள். ஜெகன் மூர்த்தி இபிஎஸ் அணிக்கு ஆதரவு தருவதாக தெரிவித்துள்ளார். அது போல் ஏற்கெனவே கூட்டணியில் இருந்த ஏசி சண்முகத்தின் புதிய நீதி கட்சி பாஜகவுக்கு ஆதரவு என அறிவித்துவிட்டது.

இதுகுறித்து மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு உதவியாளராக இருந்த பூங்குன்றன் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: தேடி வந்த ஆதரவு கொடுத்த காலம் போய் ஆதரவை தேடி ஓடுகிற காலம் வந்துவிட்டது காலம் மாறுது கருத்தும் மாறுது, நாமும் மாற வேண்டும். நம்மால் நாடும் மாற வேண்டும்.

மண்வெட்டி கையில் எடுப்பார் சில பேர் மற்றவர்க்கு குழி பறிப்பார். அது தன்பக்கம் பார்த்திருக்கும் என்பதை தானறிய மறந்திருப்பார். ஆகாத பழக்கமெல்லாம் மனதுக்குப் பொருந்தாத வழக்கமெல்லாம் ஆக்கத்தைக் கெடுத்துவிடும். மனிதனின் அழிவுக்கு வழி வகுக்கும்
பந்தெடுத்து விட்டு எறிந்தால் சுவர் மேல் பட்டது போல் திரும்பி வரும். இந்தத் தத்துவத்தைத் தானறிந்தால் பிறர்க்கு தீங்கு செய்ய எண்ணம் வருமோ! என உருக்கமாக கூறியுள்ளார் .
