ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணித்த அதிமுக, தேமுதிக, பாமக..!
ஆளுநர் ஆர்.என்.ரவியின் அழைப்பை ஏற்று சென்னை ராஜ்பவனில் நடைபெற்ற தேநீர் விருந்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.
நாட்டின் 74வது குடியரசு தின விழாவில் ஆளுநர் மாளிகையில் அனைத்து கட்சியினருக்கும் தேநீர் விருந்து அளிப்பது மரபு. அதன் அடிப்படையில், ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்க அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுருந்தது. கடந்த ஜனவரி நான்காம் தேதி சென்னையில் நடந்து விழாவில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகமென்று சொல்வதைப் பொருத்தமானதாக இருக்கும் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.
தொடர்ந்து சட்டமன்றத்தில் ஆளுநர் உரையின் போது சில வார்த்தைகளை சேர்த்தும் சில வார்த்தைகளை தவிர்த்தும் பேசினார். இதற்கு எதிராக உடனடியாக தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தீர்மானத்தை முன்மொழிந்தார். இந்த சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆளுநருக்கு எதிரான எதிர்ப்புகள் வலுத்தன. கூட்டணி கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன. ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்தன.
இதையடுத்து தமிழகம் என்பது குறித்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்று மறுப்பு தெரிவித்தார் ஆளுநர். இந்த நிலையில் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுக கூட்டணி கட்சிகள் ஒட்டுமொத்தமாக நேற்று அறிவித்தது.
இதையடுத்து ஆளுநர் ஆர்.என்.ரவி தொலைபேசி வாயிலாக தமிழக முதலமைச்சரை தொடர்பு கொண்டு, தேநீர் விருந்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். அதனடிப்படையிலேயே , மரபையும் மாண்பையும் காக்கும் விதத்தில் அழைப்பை ஏற்று தமிழ்நாடு முதல்வர் முக.ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், ஐ.பெரியசாமி,ஏ.வ.வேலு ,பொன்முடி உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் சேவூர் ராமசந்திரன் மற்றும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கள்ளக்குறிச்சி செந்தில், அரக்கோணம் ரவி ஆகியோர் கலந்து கொண்டனர். ஓ, பன்னீர்செல்வம் அணி சார்பில் யாரும் பங்கேற்கவில்லை. அதேபோல தேமுதிக, பாமக சார்பிலும் யாரும் கலந்து கொள்ளவில்லை. பாஜக சார்பில் தலைவர் அண்ணாமலை ,துணை தலைவர் வி பி துரைசாமி ,நாராயண திருப்பதி மற்றும் த.மா.கா கட்சி சார்பில் ஜி.கே.வாசன் ,புதிய தமிழக கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கலந்து கொண்டனர்.
சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் தலைமைச் செயலாளர் இறையன்பு,டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள், திரைபிரபலங்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். குடியரசு தின அலங்கார ஊர்திக்கான முதல் பரிசை காவல்துறை ஊர்தி சார்பில் தமிழக டிஜிபிக்கு ஆளுநர் வழங்கினார். இரண்டாவது பரிசை தீயணைப்புத்துறை அலங்கார ஊர்தி பெற்று கொண்டது. செய்தி மக்கள் தொடர்புத் துறைக்கு மூன்றாம் பரிசு வழங்கபட்டது.
