கொரோனா நிலைமையை சமாளிக்க கூகுள் ரூ.135 கோடி நிதியுதவி!
இந்தியாவில் வேகமாகப் பரவிவரும் கொரோனா வைரஸின் நிலைமையைச் சமாளிப்பதற்கு கூகுள் நிறுவனம் ரூபாய் 135 கோடி நிதியுதவி வழங்குவதாக சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸின் இரண்டாவது அலை இந்தியாவில் வேகமாகப் பரவி வருகிறது. இதனால் தினமும் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். இதில் மகாராஷ்டிரா, கேரளா, டெல்லி, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே பல மாநிலத்தில் மருந்துகள், ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆனாலும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்தியாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் நிலைமையைச் சமாளிப்பதற்கு கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை ரூபாய் 135 கோடி வழங்குவதாக தெரிவித்துள்ளார்.
இதைப்பற்றி அவரின் ட்விட்டர் பதிவில்; இந்தியாவில் வேகமாக பரவி வரும் வைரஸ் நெருக்கடியை சமாளிக்கவும் அதனை கருத்தில் கொண்டு கூகுள் நிறுவனம் சார்பில் ரூபாய் 135 கோடி நிதி உதவி வழங்கப்படும். மேலும், மருத்துவ உதவிக்காக கூகுள் நிறுவன ஊழியர்கள் இந்தியாவிற்கு ரூபாய் 135 கோடி வழங்குகிறது என தெரிவித்துள்ளார்.
