டவ்தே புயல்..வீடு திரும்பாத 12 மீனவர்கள்… கண்ணீருடன் கோரிக்கை வைத்த உறவினர்கள்.
கேரளாவில் இருந்து நடுக்கடலுக்கு மீன் பிடிக்க சென்ற குமரி மாவட்டத்தை சேர்ந்த 16 மீனவர்கள் வீடு திரும்பாததால் அவர்களை கண்டுபிடித்துத் தரவேண்டும் என மீனவர்களின் உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் கடற்கரை கிராமங்களான கொட்டில்பாடு,குளச்சல்,கடியப்பட்டணம்,முட்டம்,
கன்னியாகுமரி,தக்கலை ஆகிய பகுதிகளை சேர்ந்த 12 மீனவர்களும் மேற்கு வங்காளத்தை சேர்ந்த 4 மீனவர்களும் ஒரே படகில் கேரள மாநிலம் பெய்ப்பூர் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 5-ம் தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர்.
இந்த நிலையில் 15 நாட்கள் ஆகியும் அவர்கள் ஊர் திரும்பாததால் ,கடந்த வாரம் அரபிக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வுமண்டலத்தில் உருவான டவ்தே புயலில் சிக்கி விசைபடகு சேதம் ஏற்பட்டு மீனவர்கள் ஆபத்தில் இருக்க கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் காணாமல் போன மீனவர்களின் குடும்பத்தினர் குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து நடுக்கடலில் மீன்பிடிக்க சென்ற போது காணாமல் போன 16 மீனவர்களை கண்டுப்பிடித்து தர வேண்டும் என கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு தெரியப்படுத்தி ஆழ்கடலில் பல மையில் தூரம் 16 மீனவர்கள் சென்ற அஜிமேர்ஷா விசைபடகு அடித்து செல்லப்பட்டு இருக்க வாய்ப்பு இருக்க கூடும் எனவும், எனவே அதில் உள்ள 16 மீனவர்களையும் கோவா முதல் மும்பை வரை உள்ள ஆழ்கடல் பகுதியில் இந்திய கப்பல் படையின் துணையோடு ஹெலிகாப்டர் உதவியுடன் தேடி கண்டுப்பிடித்து தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்..
