மகாராஷ்டிரா அரசு 5 லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்களை வீணடித்தது – பிரகாஷ் ஜவடேகர் குற்றச்சாட்டு!
சரியாக திட்டமிட்டால் மகாராஷ்டிரா அரசு ஐந்து லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்களை வீணடித்து உள்ளது என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் குற்றம்சாட்டி உள்ளார்.
மீண்டும் இந்தியாவில் தினந்தோறும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் நாடு முழுவதும் தடுப்பூசி மருந்து செலுத்தும் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்தியாவில் அதிகமாக மகாராஷ்டிரா தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 31 லட்சத்து 73 ஆயிரத்து மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 59 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, எங்கள் மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி டோஸ்களில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக மகாராஷ்டிரா மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோப் தெரிவித்துள்ளார். எங்களிடம் 14 லட்சம் டோஸ்கள் தான் உள்ளது எனவும் இன்னும் மூன்று தினங்களுக்கு மட்டும் உபயோகப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இவருடைய கருத்துக்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தக்க பதிலடி கொடுத்துள்ளார். இதை பற்றி அவர் கூறியது; மத்திய அரசின் ஒதுக்கீட்டு படி உங்கள் அரசுக்கு அதிகமான தடுப்பூசி மருந்துகள் கொடுக்கப்பட்டுள்ளது.
அங்கு தற்போது 23 லட்சம் டோஸ்கள் கையில் உள்ளது எனவும் 5 முதல் 6 நாட்கள் உபயோகப்படுத்தலாம் எனவும் தெரிவித்துள்ளார்.சரியாக திட்டமிடாததால் 5 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் வீணாகியுள்ளது. இதனால் சரியாக திட்டமிட்டு செய்யப்பட வேண்டும் என பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
